DYFI போராட்டம் எதிரொலி – ஆட்சியர் மற்றும் போக்குவரத்து துறைச் செயலாளருக்கு நோட்டீஸ்
அண்ணாநகருக்கு இயக்கப்படாத அரசுப் பேருந்து – ஆட்சியர் மற்றும் போக்குவரத்து துறைச் செயலாளருக்குத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து எண் 21, அருகே சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணாநகர் பகுதிக்கு இயக்குவதில்லையென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் சாதிய பாகுபாடுகள் பார்த்து, ஆதிக்க சாதியினர் அரசுப் பேருந்தை வர விடுவதில்லை எனவும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அண்ணாநகர் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படாததால் அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த செப்.23 களத்திற்குச் சென்ற இந்திய ஜனநாயக சங்கத்தினர் ஊர் மக்களைச் சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
மேலும் செப்.26 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததோடு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநில தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இறுதியாகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் அளித்தனர். இந்நிலையில் கெம்பனூர் அண்ணாநகர் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படாமல் இருப்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வலியுறுத்திக் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகச் செயலருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதில் இந்தப் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? பேருந்து இயக்கப்படுகிறதா, தற்போதைய நிலை என்ன? விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ்ராஜா கூறியதாவது : கெம்பனூர் பகுதிவரை இயக்கப்படும் அரசுப் பேருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணாநகர் பகுதிக்குச் சாதிய தீண்டாமையால் இயக்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது, மாநில தாழ்த்தப்பட்ட நல ஆணையத்திற்கும் புகார் அளித்தது எந்த நடவடிக்கையும் இல்லை.
பேருந்தை இயக்குவதில் என்ன பிரச்சனை உள்ளது எனத் தெரியவில்லை. தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும், விரைவில் பேருந்து எண் 21 உடனடியாக அண்ணாநகர் வரை இயக்க வேண்டும் என்றார்.