தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்!
தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் மீதான நாடு தழுவிய அளவில் நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.சிவசாமி தலைமை தாங்கினார்.
நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் தலித், பழங்குடி, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் தலித் மக்கள் கேட்பாரற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் கார்ப்பரேட் நிறுவங்கள் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்க மலை வாழ் பழங்குடி மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அப்புறப் படுத்துவதோடு அவர்கள்மீது தாக்குதலும் தொடுத்து வருகிறது.
அதேபோலச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியல் நாடு தழுவிய அளவில் பரப்பப்படுகிறது. சில காவி பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டே இச்செயலில் ஈடுபட்டு வருகிறது.
தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் சொந்த நாட்டில் அகதிகளைப் போல அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடுதழுவிய அளவில் தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் மீதான தகவல்களைக் கண்டித்தும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும் இன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.