தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டம்.
கோவை மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்த வாகன ஓட்டுநர்களைப் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த நான்கு தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்களை உரிய காரணமின்றி பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து, சக வாகன ஓட்டுநர்கள் கோவை மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபாகரன், பெருமாள், சிவசங்கர், பிரகாஷ் ஆகிய நான்கு ஓட்டுநர்களையும் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த நிறுவனம் திடீரெனப் பணி நீக்கம் செய்தது. “காரணம் காட்டாமல் எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்றுவரை மீண்டும் பணியமர்த்தப்படவில்லை” எனப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், தற்போதைய ஒப்பந்த நிறுவனம் வாகனங்களைச் சுடுகாட்டில் நிறுத்துமாறு கட்டாயப்படுத்துவதாகவும், காலதாமதமாகச் சம்பளம் வழங்குவதோடு, பணப் பலன்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளையும் மறுப்பதாகவும் அவர்கள் கடும் ஆதங்கம் தெரிவித்தனர். காலை 10 மணி முதல் மாலைவரை மாநகராட்சி அலுவலக வாயில் முன்பு 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் காரணமாக அங்கு பெருமளவில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். “எங்களைப் பணி நீக்கம் செய்த நால்வரையும் உடனடியாக மீண்டும் பணியமர்த்த வேண்டும்; ஒப்பந்த நிறுவனத்தின் அத்துமீறல்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும்” என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. மாநகராட்சி உயரதிகாரிகள் இதுவரை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் தொடர்வதால் கோவை மாநகரின் குப்பை அகற்றும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.