வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட மோப்ப நாய் மரணம் – காவல்துறையினர் அஞ்சலி
கோவையில் வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 13 வயது மோப்ப நாய் சிந்து மரணமடைந்தது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வளாகத்தில் பின்புறம் கோவை மாநகர மோப்ப நாய் பிரிவு உள்ளது. இங்குக் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள், மற்றும் வெடிகுண்டு மிரட்டல் கஞ்சா பதுக்கல் போன்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குத் தற்போது 20 மேற்பட்ட மோப்ப நாய்கள் உள்ளன.
இந்த நிலையில் அங்கு இருந்த சிந்து (13) என்ற பெண் லாப்ரடோர் வகை மோப்ப நாய் நேற்று இரவு திடீரென்று உடல்நிலை பாதிப்பால் இறந்தது. வயது மூப்பு காரணமாகச் சிந்து இறந்ததாக போலீசார் கூறினர்.
சிந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட்டது. இதற்கு அப்போதைய போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு சிந்து என்று பெயர் சூட்டினார். சிந்து வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு பிரிவில் பணியில் சேர்க்கப்பட்டது பல்வேறு காலங்களில் வெடிகுண்டு வழக்குகள் மற்றும் மிரட்டல் சம்பவங்களில் மோப்ப நாய் சிந்து பணியாற்றியுள்ளது.
. 8 ஆண்டுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிந்து கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி வயது மூப்பு காரணமாகஓய்வு பெற்றது. தொடர்ந்து அது கோவை மாநகர மோப்பநாய் பிரிவு கட்டிடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமாகி சிந்து அவதிப்பட்டு வந்தது.
அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பலன் இல்லாமல் இறந்து விட்டது. இறந்த சிந்துவுக்கு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிந்துவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.