பிரதமர் கோவை வருகை: கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழகம் மற்றும் தமிழர்கள்குறித்து அவதூறாகப் பேசி விட்டு, வரும் 19 ஆம் தேதி கோவை வரும் பிரதமரை வெளியேற வலியுறுத்திக் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 19ஆம் தேதி தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகப் பி.ஆர். பாண்டியன் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழகம் மற்றும் தமிழர்கள்குறித்து அவதூறான கருத்துக்களை பேசிய பிரதமர் மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 19ஆம் தேதி கோவையில் உள்ள தபெதிக, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் கூறும்போது: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசும்போது பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்படுகிறார்கள் மற்றும் தமிழ்நாட்டில் பீகார் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனப் பேசினார். மேலும் வேண்டுமென்றே தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் மீது வன்மத்தை உருவாக்கியுள்ளார்.
இதே போல் ஒரிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்திருந்தார். குறிப்பாக ஜெகநாதர் ஆலயத்தின் பொக்கிஷ பெட்டியின் சாவிகள் தமிழர்களால் திருடப்பட்டு, தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது எனப் பேசினார்.
தமிழகத்தில் அமைதியாக, பாதுகாப்போடு வட மாநில தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளும் இங்குள்ள பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். இப்படிப்பட்ட தமிழகத்தில் அத்தொழிலாளர்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வரும் சூழலில் தமிழர்கள்மீதும், தமிழகத்தின் மீதும் வீணான பழியை சுமத்தி விட்டுப் பிரதமர் மோடி வரும் 19ஆம் தேதி கோவைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர்கள்குறித்து அவதூறாகப் பேசிய பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க முடியாது அந்த வகையில் முற்போக்கு அமைப்பினர் இணைந்து வரும் 19ஆம் தேதி கோவை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம்.
மேலும் அவரைத் தமிழகத்தை விட்டுத் திரும்பப் போக வலியுறுத்திக் கோஷங்களை எழுப்ப உள்ளோம். இந்தப் போராட்டத்தில் தபெதிக உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இயக்கங்கள் கலந்து கொள்ள உள்ளது. முன்னதாக விமான நிலையம் வரும் பிரதமருக்கு விமான நிலைய வாயிலில் நின்று எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட உள்ளோம் எனத் தெரிவித்தார்.