வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ரோலக்ஸ்!
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் என்ற காட்டு யானை வனத்துறை கண்காணிப்புக்கு பிறகு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆலந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தியதோடு, விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையைப் பிடித்து, இடம் மாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த அக்.17 -ம் தேதி தொண்டாமுத்தூர் அருகே ரோலெக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து பிடிபட்ட காட்டு யானையை டாப்ஸ்லிப் வரகழியாறு யானைகள் முகாமிற்கு இடமாற்றம் செய்து அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் யானை பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ரோலக்ஸ் யானை அதிகாலை ஆனைமலை புலிகள் காப்பகம், முந்திரி மட்டம் வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. மேலும் யானையைத் தொடர்ந்து கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.