சாலை பாதுகாப்பு: குழந்தைகளை வைத்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு
கோவை செட்டிபாளையம் தனியார் பள்ளி குழந்தைகள் சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நாடகம், பாடல்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பெற்றோர்களுக்குத் தலைகவசம் வழங்கினர்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சார்பில், அப்பள்ளியில் பயின்றுவரும் குழந்தைகள் சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நாடகம், பாடல், சொற்பொழிவுகள்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அங்கு வந்த பெற்றோர்கள் முன்னிலையில் தலை கவசம் அணியாமல் செல்வதாலும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஏற்படும் பாதிப்புகுறித்து குழந்தைகள் தத்துரூபமாக நடித்துக் காட்டினர்.
அப்போது நிகழ்ச்சி பார்க்க வந்த சுமார் நூறுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், வாகன ஓட்டிகளுக்கு பள்ளி குழந்தைகள் தலைகவசத்தை பரிசாக வழங்கினர். மேலும் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்ட வேண்டாம் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து பேசிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வ.யோகாம்பாள் கூறும் போது:
தற்போதைய நவீன காலத்தில் புதிதாக வாகனங்கள் அதிகளவு வரத் துவங்கியுள்ளது. அதற்கு ஏற்ப விபத்துகளும் நடந்து வருகிறது. இந்த விபத்துக்கு மூலக் காரணமாக இருப்பது நமது அலட்சியம் மட்டுமே. இதன் காரணமாகவே பள்ளி குழந்தைகளை வைத்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
முக்கியமாக விபத்து நடைபெறும் போது மற்ற உடல் பாகங்கள் பாதிக்கப்பட்டால் குணப்படுத்த முடியும். ஆனால் தலைக்கவசம் அணியாமல் மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழக்கும் சூழல் ஏற்படும் இதன் காரணமாகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குழந்தைகள் மூலமாக நடத்தப்பட்டது என்றார்.