ஆம்னி பேருந்து வேலை நிறுத்தம் – விரைவில் முதல்வர் தீர்வு காண வேண்டுகோள்
ஆம்னி பேருந்து வேலை நிறுத்தம் காரணமாக 4 நாட்களாக வாழ்வாதாரம் இழந்து இருப்பதாகவும், தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாகவும், தமிழக முதல்வர் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனக் கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அண்டை மாநிலங்களில் சாலை வரி தனியாக விதிக்கப்படுவதை கண்டித்து, தமிழகத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இன்று கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சாலை வரி தொடர்பாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் நடந்து வரும் நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை எனவும், அரசின் கவனத்திற்கு பிரச்சனைகள் கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவையிலிருந்து கேரளா, ஆந்திரா கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வில்லை எனவும் தெரிவித்தனர். வெளி மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் வரி வசூல் செய்ய ஆரமித்ததால், பிற மாநிலங்களிலும் இதே போலத் தமிழக பேருந்துகளுக்கு அந்தந்த மாநிலங்களில் வரி வசூல் செய்கின்றனர் எனவும், கேரளாவிலும் கர்நாடாவிலும் லட்ச கணக்கான ரூபாய் வரை வரி விதிக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.
ஆல் இன்டியா பர்மிட் வாங்கி இருக்கும் நிலையில், 90 நாளைக்கு பர்மிட் இருக்கிறது எனவும், ஆல் இந்தியா பர்மிட்டிற்கு வரி வசூல் செய்யும் மத்திய அரசு தமிழகத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கி இருக்கின்றது எனவும் தெரிவித்தனர். தமிழகத்தில் முதலில் வரி வசூல் செய்வதால் மற்ற மாநிலங்களிலும் வரி வசூல் செய்கின்றனர் எனவும், வடமாநிலங்களில் இது போன்ற பிரச்சினை இல்லை எனவும்,
இவ்வளவு தொகை வரி செலுத்தி எங்களால் வாகனம் இயக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு இயக்க வில்லை எனவும், அங்கிருந்தும் இங்கு வாகனங்கள் இயக்கப்பட வில்லை எனவும், ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் துவங்கி நான்கு நாட்கள் ஆகிய நிலையில், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர் எனவும், கோவையில் மட்டும் 3500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் இதில் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எதிர்பார்க்கின்றோம்.
தமிழக அரசிடமிருந்து நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.
அரசு நிறைய சலுகைகளை ஆம்னி பேருந்துகளுக்குச் செய்து இருக்கிறது, பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறது வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து இருக்கின்றது எனத் தெரிவித்த அவர்கள், இந்தச் சாலை வரி பிரச்சினையையும் அரசு சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நீதிமன்றம் சென்றால் உடனடியாகத் தீர்வு கிடைக்காது, அதனால் அரசிடம் கோரிக்கையாக வைக்கின்றோம் எனவும், அரசு நல்ல முடிவு சொல்லும் வரை பேருந்துகளை வெளி மாவட்டங்களுக்கு இயக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
பண்டிகை காலத்தில் நிலையான கட்டணம் என எதுவும் நிர்ணயிக்க வில்லை எனவும், ஒரு சில பேருந்துகளில் அதிக கட்டணம் பண்டிகை காலங்களில் வசூலித்து விடுவதாகவும், சங்கத்தின் மூலம் அதைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
சாலை வரி பிரச்சனைக்குத் தீர்வு கண்டு ஆம்னி பேருந்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.