ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் குரங்கு – வனத்துறையினர் கூண்டு வைப்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் குரங்கைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென வந்த குரங்கு ஒன்று கட்டிடங்களில் மீது ஏறி அங்கும் இங்கும் அலைந்தது. தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறு தானிய உணவக வாயில் அருகே நீண்ட நேரம் இருந்த குரங்கு மூதாட்டி ஒருவரிடம் உணவைப் பறித்துச் சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் அங்குள்ள சிறுதானிய உணவகத்தின் அருகே குரங்கைப் பிடிக்க கூண்டு வைத்தனர். மேலும் குரங்கை உள்ளே வரவழைக்கப் பழங்களை வெட்டி கூண்டுக்குள் போட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது: இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். திடீரென குரங்கு ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது.
அக்குரங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே விரைந்து குரங்கை பிடித்து வனப்பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.