கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞர் சிறையில் அடைப்பு
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், இரு கால்களில் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட குணா என்கிற தவசியை சிகிச்சைப் பின் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நவ.2 ஆம் தேதி, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த 23 வயது கல்லூரி மாணவியை, மது போதையில் வந்த மூன்று பேர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து மூவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வெள்ளக்கிணறு அருகே பதுங்கியிருந்த சிவகங்கையை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்புசாமி (30), காளீஸ்வரன் (21) மற்றும் மதுரையை சேர்ந்த குணா என்கிற தவசி (20), ஆகிய மூவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
இதில் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்த சதீஷ், தவசி மற்றும் ஒரு காலின் குண்டு பாய்ந்த காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் போலிசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட குணா என்கிற தவசி சிகிச்சைக்கு பின், உடல் நல தேரியதால், மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்ற போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கருப்புசாமி, காளீஸ்வரன் இருவரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். விரைவில் அவர்களும் சிகிச்சைக்கு சிறையில் அடைக்கபட உள்ளனர்.