உலகெங்கிலும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும் இந்தத் தமிழ் மண்ணுக்கும் என் பணிவான வணக்கங்கள் – சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவை விமான நிலையத்திற்கு வந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவினர் பூரண கும்பம் வரவேற்பு அளித்தனர்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம்மூலம் கோவை வந்த துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு கோவை விமான நிலையத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டு மேள தாளங்கள் முழங்கவும் பூரண கும்ப மரியாதை அளித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் முக்கியஸ்தர்கள் வரும் வழியில் கார் மூலமாக வெளியே வந்த சி பி ராதாகிருஷ்ணன், பூரண கும்ப மரியாதை அளிப்பதற்காகத் திரண்டு இருந்த பெண்களைப் பார்த்தவுடன் காரிலிருந்து கீழே இறங்கி தலை வணங்கிக் கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து வரவேற்புக்காகத் திரண்டிருந்த பாஜகவினரை நடந்து சென்று சந்தித்த சி பி ராதாகிருஷ்ணன் அவர்களது உற்சாக வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உலகெங்கிலும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும் இந்தத் தமிழ் மண்ணுக்கும் என் பணிவான வணக்கங்கள் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்” என்று கூறி சென்றார். துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் வருகையை ஒட்டிக் கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் விமான நிலைய வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.