கோவை இரட்டை கொலை வழக்கு – 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.
கோவை ஒப்பணக்கார வீதியில் 2 பேரைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4 லட்சம் அபராதம் விதித்து 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை மரக்கடை திருமால் வீதியைச் சேர்ந்தவர் மொய்தீன் பாஷா (34). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். அதேபோல் உக்கடம் பகுதியில் அவரது உறவினரான சாதிக் அலி என்பவரும் இறைச்சிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2015 அக் – 31ஆம் தேதி மொய்தீன் பாஷா கடையில் இல்லாதபோது, அங்கு வந்த சாதிக் அலி சுமார் 4 கிலோ மாட்டு இறைச்சியை கேட்காமல் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கடைக்கு வந்த மொய்தீன் பாஷாயிடம் அங்குப் பணியாற்றிய நபர் கூறியதை தொடர்ந்து, மொய்தீன் பாஷா மற்றும் அவரது நண்பர்கள் சாதிக் அலியின் கடைக்குச் சென்று சொல்லாமல் இறைச்சி எடுத்துச் சென்றது தொடர்பாகக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொய்தீன் பாஷா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இதையடுத்து இரவு 7 மணியளவில் சாதி அலியின், நண்பரான அஸ்கர் அலி என்பவர் ஃபோன் செய்து இந்தப் பிரச்சனை தொடர்பாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாமென ஒப்பணக்கார வீதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதை நம்பி மொய்தீன் பாஷா மற்றும் அவரது நண்பர் அபீப் முகமது உள்ளிட்டோர் இரவு 11 மணியளவில் சென்றனர். அங்குக் காத்திருந்த சாதிக் அலி மற்றும் அவரது நண்பர்கள் மொய்தீன் பாஷா மற்றும் அபீப் முகமதை கத்தியால் குத்தினர். இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீசார் வழக்குப் பதிவு செய்து சாதிக் அலி, ஷேக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன், அசாருதீன் ஆகிய ஆறு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 5 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே வழக்கில் தொடர்புடைய ஷேக் அலி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். வழக்கு விசாரணை நிறைவடைந்து குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில் மொய்தீன் பாஷா மற்றும் அபீப் முகமது ஆகிய இருவரை கொலை செய்த வழக்கில் சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன், அசாருதீன் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என்றும், 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.4 லட்சம் அபராதம் செலுத்த நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.