கஞ்சா விற்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது – 25 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை மலுமிச்சம்பட்டி அருகே கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற ஆந்திரா இளைஞர்கள் இருவரை போலீசாரா் கைது செய்து, 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கோவை மலுமிச்சம்பட்டி அருகே கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகச் செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து செட்டிபாளையம் போலீசார் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளைவு அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த இளைஞர் பையில் சுமார் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இளைஞர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே வேறொரு நபர் வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கட்லா ராம லக்ஷ்மணன் (20), மண்டா வீரபாபு (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.