ரயில்வே தண்டவாளம் அருகே ஆண் குழந்தை கொலை!
கோவை இருகூர் ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் 1.5 மாத ஆண் குழந்தை சடலமாக மீட்பு – 2 தனிப்படைகள் அமைத்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை இருகூர் ராவத்தூர் தரைப்பாலம், அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் சுமார் 1.5 மாத ஆண் குழந்தை உடல் கிடப்பதாக உள்ளூர் மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தை உடல் கண்டறியப்பட்ட இடத்தின் அருகே பலி கொடுக்கப்பட்ட கோழி, மற்றும் மசாலா பொடி கண்டறியப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் ரயில்வே தண்டவாளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் 2 தனிப்படைகள் அமைத்துச் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைச் சேகரித்து விசாரணையைத் தீவிரபடுத்தியுள்ளனர்.
முதல் கட்ட விசாரனையில் 1.5 மாத ஆண் குழந்தை வயிற்றில் ரயில் ஏறியதால் உயிரிழந்ததும், அருகே கொலையைத் திசைத் திருப்பும் நோக்கில் கோழி மற்றும் மசாலா பொடி வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கோழி உடல் அருகே கண்டறியப்பட்ட மசாலா பொடியை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அது சாம்பார் பொடி என்பது தெரியவந்தது.
ரயில்வே தண்டவாளம் அருகே குழந்தை உடல் மற்றும் பலி கொடுக்கப்பட்ட கோழி கண்டறியப்பட்ட சம்பவம் இருகூர் சுற்றுவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.