கோயம்புத்தூர்செய்திகள்

நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத விவகாரம் – அரசு மருத்துவமனை நிர்வாகம் புதிய விளக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்குச் சக்கர நாற்காலி வழங்காத விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி காட்சிகளுடன் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் வடிவேல் (85). இவர் நேற்று முன்தினம் தனது மகனுடன் காலில் ஏற்பட்ட பிரச்சனைக்குச் சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். முன்னதாக ரத்த நாளங்கள் பரிசோதனை செய்யும் பிரிவுக்கு சென்று மருத்துவரை பார்த்துவிட்டு, பொது அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்தார்.

அப்போது அவரை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி வழங்கவில்லை என்றும், நாற்காலி வழங்க ரூ.100 லஞ்சம் கேட்டதாகவும் கூறி தனது தந்தையை கை தாங்கலாக இழுத்துச் சென்று ஆட்டோவில் அமர வைத்தார். இந்த விடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி அப்போது பணியில் இருந்த இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு மீண்டும் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனைக்கு வரும்போது கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருந்ததும், சக்கர நாற்காலிக்கு காத்திருந்தபோது, வேறு நோயாளியை அங்கிருந்த ஊழியர்கள் அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் வருவதற்குள் வடிவேல் உடன் வந்த அவரது மகன் ஆட்டோ ஓட்டுனரை அழைத்து, வடிவேல் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை பிடுங்கி அவரிடம் கொடுத்து விட்டு, தனது செல்போனையும் கொடுத்து வீடியோ எடுக்குமாறு கூறி தந்தையை கை தாங்கலாக இழுத்துச் சென்றது தெரிய வந்தது.

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் போதுமான அளவிற்கு சக்கர நாற்காலிகள் இருப்பதாகவும், ஊழியர்களும் பணியில் தயாராக இருந்த நிலையில், சிறிது நேரம் தாமதமானதால் வேண்டுமென்றே வீடியோ எடுத்து பகிரப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!