அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்துச் செல்ல வீல் சேர் தராத விவகாரம் – இருவர் பணியிடை நீக்கம்
கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த 84 வயது முதியவருக்கு வீல் சேர் கொடுக்காததால், மகனே அவரை இழுந்தவாறு சென்று ஆட்டோவில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் வடிவேல் (84). இவருக்குச் சக்கரை நோயால் ஏற்பட்ட ஆழமான கால் புண்ணிற்காகக் கோவை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல வடிவேலை சிகிச்சைக்காக அவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அழைத்து வந்தார்.
சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு செல்ல நீண்ட நேரம் காத்திருந்தும் வீல் சேர் ஏதும் வராததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது மகன், வடிவேலை தூக்க முடியாமல் கைத்தாங்கலாக இழுத்துச் சென்றார்.
பின்னர் ஆட்டோமூலம் தந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கோவை அரசு மருத்துவமனையில் வயதான நோயாளிக்கு வீல் சேர் வழங்காததால் தந்தையை மகன் இழுத்துச் செல்லும் விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சரியாகப் பணிகளைச் செய்யாத தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் எஸ்தர் ராணி, மாணிக்க வாசகம் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.