அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கவும், பொதுமக்களை காக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு – எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்ட மலையடிவார கிராமங்களில் யானைகள் அடிக்கடி வருவதால் மனித உயிரிழப்பு, காயம், விவசாய நிலங்கள் சேதம் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: கடந்த வாரம் கோவை நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டிணம் பகுதியில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, விவசாய நில வேலியையும், வாகனங்களையும் சேதப்படுத்தியதோடு, விநாயகர் கோவில் அருகில் இருந்த 90 வயது முதியவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியது.
இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இச்சம்பவம் தனிப்பட்டதல்ல. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வருவதால் மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.
வனப்பகுதிக்குள் உணவு, குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்படாததால் யானைகள் கிராமங்களுக்குள் வந்து சேதம் விளைவிக்கின்றன. இதனைத் தடுக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்வேலி அமைப்பது, உருக்கு கம்பிவேலி போடுவது, வனத்துறையில் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். வனத்துறைக்கு ரோந்து வாகனங்கள், டார்ச் லைட்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ள குழு செப்டம்பர் 5, 6 ஆம் தேதிகளில் ஆய்வுக்கு வர இருப்பதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கருத்துகளை அரசு வலியுறுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம், வனத்துறை இணைந்து போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.