இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்: காதலிக்க மறுத்ததால் பெண்ணை அறிவாளால் வெட்டிய இளைஞர்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் புகைப்படக் கலைஞர். இவர் கோவை குனியமுத்துரை சேர்ந்த 24 வயது பெண்ணிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சேலத்திலிருந்து கோவை வந்த தினேஷ் அப்பெண்ணை நேரில் பார்த்துப் பேசியுள்ளார். அப்போது திடீரெனத் தினேஷ் பெண்ணிடம் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் இளம்பெண் தினேஷின் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும் தொடர்ந்து வற்புறுத்தியதால், அவரது எண்ணைப் பிளாக் செய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் மீண்டும் கோவைக்கு வந்து இளம் பெண் பணியாற்றி வந்த கார் ஷோரூமிற்குள் புகுந்து அவரை அறிவாளால் வெட்டியுள்ளார்.
இந்த வழக்கில் தினேஷை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த தினேஷ் மீண்டும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நேற்று இரவுக் கோவை குனியமுத்தூர் பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த இளம் பெண், வீட்டிலிருந்து வெளியே இருந்த மளிகை கடைக்குச் சென்றபோது, திடீரென அங்கு வந்த தினேஷ் மீண்டும் அப்பெண்ணை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் இளம் பெண்ணை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இளம் பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாகக் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிச்சென்ற தினேஷை தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிக் காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை அறிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.