கோவையில் ரூ.1.20 கோடி திருடிய வீட்டின் உரிமையாளர் கைது!
கோவை வடவள்ளி அருகே, வாடகைக்கு குடியிருப்பவரின் வீட்டில் 1 கோடியே 20 லட்சம் பணத்தை திருடிய வீட்டு உரிமையாளரை வடவள்ளி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை இடையர்பாளையம் பெரியண்ணன் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(41). ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றார்.
இவருக்குச் சொந்தமாக வடவள்ளி அருகே பொங்காளியூரில் மாடி வீடு உள்ளது. இந்த வீட்டினை பிரியா ராமக்கிருஷ்ணன் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
பிரியா ராமகிருஷ்ணன் தனக்கு சொந்தமான வீட்டைச் சமீபத்தில் விற்பனை செய்து கடன் தொகைகளைச் செலுத்தி விட்டு, மீதம் உள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் பணத்தை ஒரு பெட்டியில் போட்டு, தனது வீட்டில் பிரியா ராமகிருஷ்ணன் வைத்துள்ளார்.
நேற்று காலைத் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற பிரியா, மதியம் வீட்டுக்கு வந்து போது வீட்டிலிருந்த பொருட்கள் கலைந்து கிடந்த்துடன், ரூ.1 கோடியே 20 லட்சம் பணம் இருந்த பெட்டிய திருடப்பட்டது தெரிய வந்தது.
வீட்டின் கதவை உடைக்காமல் பணம் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டு உரிமையாளர் வேல்முருகன் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து சந்தேகத்தின் பேரில், வேல்முருகனை பிடித்து விசாரித்தபோது, வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்து மாற்றுச்சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து, வேல்முருகன் ரூ.1 கோடியே 20 லட்சம் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் வீட்டு உரிமையாளர் வேல்முருகன் கைது செய்து, அவரிடம் இருந்த 1.20 கோடி ரூபாயினை பறிமுதல் செய்தனர்.