கோவை மாநகரில் பணியாற்றும் பீட் போலீசார்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டது!
கோவை மாநகரில் பணியாற்றும் 59 பீட் காவலர்களுக்குப் பிரத்தியேக எண் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய செல்போன்களை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வழங்கினார்.
கோவை மாநகரில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பீட் காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரு சக்கர ரோந்து வாகனங்கள்மூலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மிக எளிமையாகப் போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில் கோவை மாநகரில் பணியாற்றும் பீட் காவலர்களுக்கெனத் தனி எண் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய செல்போன்கள் மாநகர காவல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரை பொதுமக்கள் மிக எளிமையாகத் தொடர்பு கொண்டு பிரச்சனைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க முடியும்.
அதே போல் பொதுமக்கள் அந்த எண்ணிற்கு அழைக்கும்போது அவர்கள் இருக்குமிடம் ஜி.பி.எஸ் கருவிமூலம் கண்டறிந்து உடனடியாக அங்குச் செல்ல உதவும். இதன் மூலம் புகார் அளித்த சுமார் ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு போலீசார் செல்ல முடியும்.
தமிழகத்திலேயே கோவை மாநகரில் மட்டுமே அனைத்து பீட் போலீசார்களுக்கும் பிரத்தியேக எண்ணுடன் கூடிய செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தச் செல்போன்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரும் காவலர்களிடம் மட்டுமே இருக்கும் அதே போல் எந்தெந்த பகுதியில் யார் பணியில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள QR Code மூலம் ஸ்கேன் செய்து செல்போன் எண்களைப் பெறும் வகையில் நோட்டீசுகளும் மாநகரில் ஆங்காங்கே ஒட்டப்பட உள்ளது.