மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் தற்கொலை!
கோவை அரசு மருத்துவமனைக்கு, தொடர் தலைவலி சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் பொது கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அசாம் மாநிலம், சுனித் பூரை சேர்ந்தவர் துப்பில் வரலா (22). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் உள்ள தனியார் கோழி இறைச்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து தலைவலி இருந்ததாக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லையெனக் கூறியுள்ளனர்.
இருப்பினும் தலைவலி இருந்ததால் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அங்கும் மருத்துவர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லையெனக் கூறியதால் உடுமலைப்பேட்டைக்குச் சென்றார்.
இந்நிலையில் மீண்டும் தலைவலி ஏற்பட்டதால் நேற்று இரவுக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது திடீரென நள்ளிரவு 12 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொது கழிப்பறைக்குச் சென்ற துப்பில் வரலா, அங்குத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.