தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கிய 2 டன் வெடிப் பொருட்கள் – கேரளாவிற்கு கடந்த முயன்றவர் கைது
சேலத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அதிக வீரியதன்மை கொண்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் உட்பட 2 டன் வெடிபொருட்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக உரிய ஆவணங்களின்றி வெடி பொருள்கள் கடத்தப்படுவதாகத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மதுக்கரை மரப்பாலம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பொலீரோ வாகனத்தை நிறுத்திப் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அதில் அதிக வீரியதன்மை கொண்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் உட்பட 2 டன் வெடிப்பொருட்கள் உரிய அனுமதி இல்லாமல் கேரளா கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
மேலும் வாகனத்தை ஓட்டி வந்தவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சுபையர் (45). என்பதும் இவர் சேலத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி வெடிபொருட்களை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு டன் வெளிப்பொருட்களை பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதனை மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் பிடிபட்ட சுபையீரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கேரளாவில் கல்குவாரிகளில் சட்ட விரோதமாக வெடிபொருட்களைப் பயன்படுத்த எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.