தர்மஸ்தலா சதி திட்டத்தில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை வேண்டும் – வானதி சீனிவாசன்
கர்நாடக மாநிலத்தின், கடலோர மாவட்டமான தக்ஷிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது. தர்மஸ்தலா கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில், நேத்ராவதி ஆற்றின் கரையோரம் மஞ்சுநாதா கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்ட இக்கோவிலை ஜெயின் சமூகத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே, கர்நாடகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அறியப்பட்டவர். ஆன்மிக, சமூக, கல்வி சேவைக்காக மத்திய அரசின் ‘பத்ம விபூஷன்’ விருதையும், கர்நாடக அரசின் உயரிய விருதான, ‘கர்நாடக ரத்னா’ விருதையும் பெற்றவர். மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட திறம்பட செயலாற்றி வருகிறார்.
தர்மஸ்தலா கோவில் மீது வீண்பழி சுமத்தி 100 கோடி ஹிந்துக்களை அவமானப்படுத்த சதி திட்டம் தீட்டிய கும்பலை மக்கள் முன்பு அம்பலப்படுத்த வேண்டும்
தர்மஸ்தலா கோவில் கர்நாடகத்தின் அடையாளமாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின், ஹிந்து, சமண மதத்தின் அடையாளமாக உள்ளது. மிகச்சிறப்பாக கோவிலை நிர்வகிக்கும் தலைமை பண்பாலும், அன்னதானம், கல்வி உள்ளிட்ட சேவை பணிகளாலும் வீரேந்திர ஹெக்டே மக்களிடம் பெரும் புகழ்பெற்றுள்ளார்.
தர்மஸ்தலா கோவிலின் புனிதத்தை கெடுக்கவும், அங்கு குவியும் பக்தர்களை தடுக்கவும் மிகப்பெரிய சதிச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. தர்மஸ்தலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என திடீரென ஒருவர் புகார் கொடுக்க, அதன் உண்மைதன்மையை கூட ஆராயமல், கர்நாடக காங்கிரஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை தர்மஸ்தலா பகுதியில் தோண்டி ஆய்வு நடத்தியது. அதைத் தொடர்ந்து தர்மஸ்தா கோவில் மீதும், இந்து மதம், கடவுள்கள் மீது அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் கர்நாடக காவல்துறையின் ஆய்வில் உடல்கள் புதைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
தர்மஸ்தலா சதி திட்டத்தில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மீதான குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்
தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார் அளித்தவர், சென்னையில் இருந்து என்னை ஒரு கும்பல் அழைத்து வந்து, இப்படித்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தியாக சிறப்பு புலனாய்வு குழு முன்பு கூறியுள்ளார். இதன் மூலம் தர்மஸ்தலா கோவில், இந்து மதத்தை மட்டுமல்லாது, கர்நாடக மக்களையும் அவமானப்படுத்த ஒரு கும்பல் சதி செய்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதன் பின்னணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இருப்பதாக, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு தயாரா என சவால் விட்டுள்ளார். சசிகாந்த் செந்தில் கர்நாடகத்தில் குறிப்பாக தர்மஸ்தலா அமைந்துள்ள கடலோர கர்நாடக மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர்.
மத்திய பாஜக அரசு மீதும், ஹிந்து மதத்தின் மீதும் குற்றம்சாட்டி ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர். எனவே, தர்மஸ்தலா விவகாரத்தில் சசிகாந்த் செந்தில் மீதான குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும். ஹிந்து மதத்தையும், 100 கோடி ஹிந்துக்களையும் அவமானப்படுத்த சதித்திட்டம் தீட்டிய கும்பலை மக்கள் முன் அம்பலப்படுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும்.