கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் முட்டை கொள்முதலில் அதிக லாபம் – பல லட்சம் மோசடி

கோவையில் முட்டை கொள்முதலில் அதிக லாபம் ஈட்டலாமெனக் கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட ராம்சேட் என்ற நபர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடர்பு கொண்ட கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்சேட் என்பவர், தான் நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருவதாகவும், தனக்கு மிகக்குறைவான விலையில் முட்டை கிடைப்பதால் தன்னிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாமெனக் கூறியுள்ளார்.

மேலும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.22 ஆயிரம், ரூ.20 லட்சம் முதலீடு செய்தால் ரூ.44 ஆயிரம் லாபம் பெறலாமெனக் கூறியுள்ளார். இதை நம்பிய சரஸ்வதி வங்கி கடன், சேமிப்பு, மற்றும் நகையை அடமானம் வைத்து ரூ.35 லட்சம்வரை முதலீடு செய்துள்ளார்.

மேலும் முட்டையாகப் பெற்று சிரமப்பட வேண்டாம், தானே விற்பனை செய்து தருவதாக ராம்சேட் கூறிய நிலையில் 2 ஆண்டுகளாக லாபமும் கொடுக்காமல், முதலீடு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி விசாரித்தபோது, இதே போலப் பல பேரை ராம்சேட் மோசடி செய்து பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதே போலப் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதால் உடனடியாக ராம்சேட் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முட்டை வியாபாரி ராஜேந்திரன் என்பவர் கூறியதாவது : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் முட்டை கடை வைத்துள்ளேன். செல்வபுரத்தை சேர்ந்த ராம்சேட் எங்களை அணுகி முட்டை கொள்முதல் செய்தால் அதிக லாபம் ஈட்டலாமெனக் கூறினார்.

இதை நம்பி ரூ.25 லட்சம் முதலீடு செய்தோம்., சந்தை விலையைவிட மிகக் குறைவான விலைக்கு முட்டை கிடைக்கும் எனக் கூறியதோடு, தினமும் ரூ.23 ஆயிரம் வரை லாபம் வரும் எனக் கூறி ஒப்பந்தம் போட்டார்.

ஆனால் அவர் கூறியது போல லாபமும் கொடுக்கவில்லை, முதலீடு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுகிறார்.

இதுவரை 7 பேரிடமிருந்து மட்டும் ரூ.1.27 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இந்த வியாபாரத்தை நம்பி வங்கிக் கடன், நகை கடன் ஆகியவற்றை பெற்று முதலீடு செய்து ஏமாந்துள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!