கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு..!
கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர் வரத்து சீரானதால் வெள்ளிக்கிழமை முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவியில் குளிக்கப் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
இதனால் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்த மழை காரணமாகக் குற்றாலம் அருவியில் நீர் வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர் வரத்து சீரானதாலும், மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா பொதுமக்கள் வருகைக்குத் திறக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
4 நாட்களுக்குப் பின் மீண்டும் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.