அரசியல்தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி எப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, அப்போதே அதிமுக கதை முடிந்து விட்டது – கே.வி.தங்கபாலு

எடப்பாடி பழனிச்சாமி எப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, அப்போதே அதிமுக கதை முடிந்து விட்டது, அவர்களுடன் சேர்ந்து எப்போதும் வெற்றி பெற முடியாது எனக் காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் கே.வி. தங்கபாலு கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மற்றும் சொத்துகள்குறித்து 12 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து  செய்தியாளர்களிடம் கே.வி.தங்கபாலு கூறியதாவது: தமிழகம் முழுவதும் காங்கிரஸின் சொத்துகளைப் பாதுகாப்பது, ஒருங்கிணைப்பது குறித்த பணிகளை மேற்கொள்ள ராகுல் காந்தி, மல்லிகாஜூர்ன கார்கே வழிகாட்டுதலின் பேரில் சொத்து பாதுகாப்பு குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்னும் பல சொத்துக்கள் சீரமைக்க காத்து கிடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சொத்து உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கட்டிடங்கள் கட்சிக்கு மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் பயன்படுத்த ஆலோசிப்போம்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை முடிவைத் தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்று கொள்ளும், ராதாகிருஷ்ணன் நல்ல நண்பர், நட்பு வேறு அரசியல் வேறு. சி.பி.ராதாகிருஷ்ணன் முதல்வரைச் சந்தித்துள்ளார். மு.க.முத்து மறைவு குறித்து அவர் சந்தித்திருக்கிறார்.

நட்பு ரீதியாக இருப்பது ஒரு பண்பாடு. தே.ஜக்கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை தலைவர் வேட்பாளர் அது அரசியல். ஆனால் பாஜக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

2026 தேர்தல்- அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டி உள்ளது, அனைத்து கிராமங்களில் காங்கிரஸ் கட்சி புத்துணர்வு பெற்று வருகிறது. ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது அதில் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டது.

அதேபோல் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. தமிழக அரசுச் சாதனைகளை மத்திய அரசே பாராட்டி உள்ளது, அதனை ஒப்புக்கொண்டுள்ளது.  பல துறைகளில் தமிழக அரசை மத்திய அரசு பாராட்டி உள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் மீண்டும் இந்தியா கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தியா கூட்டணி ஒரு கொள்கை ரீதியான கூட்டணி கடந்த 20 ஆண்டுகளாக ஒற்றுமையாக உள்ளோம் தேர்தல் குழு அமைக்கப்பட்ட பிறகு தொகுதிகள்குறித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் கலைஞர்போல் செயல்படுகிறார் அதனால் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. அரசியல் ரீதியாக அதிக தொகுதிகளைக் கேட்பது இயல்பு தான், தேர்தல் நேரத்தில் கலந்து பேசித் தொகுதிகள்பற்றி முடிவெடுப்போம். 

காங்கிரஸில் உட்கட்சி பிரச்சினை இல்லை, அனைத்து வீடுகளிலும் பிரச்சனை இருக்கும் இயல்பு தான். இனி வரும் காலங்களில் ஒன்றாக ஓரணியில் இருப்போம். தற்போது தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ள கூட்டணியில் உள்ளோம். அதே கூட்டணியில் தான் தொடர்கிறோம். 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடமையைச் செய்கிறார் ஆனால் எப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ அன்றே அதிமுகவின் கதை முடிந்து விட்டது பாஜகவுடன் சேர்ந்து ஒரு வெற்றியையும் அதிமுக பெற முடியாது.

இந்தியாவிற்கு பெரிய ஆபத்து உள்ளது,  ஜனநாயகத்திற்கும்,  ஓட்டு போடுவதிலும் ஆபத்து வந்துவிட்டது. தேர்தல் அதிகாரி கேள்வியே கேட்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிடுகிறார். ராகுல் காந்தி தைரியமாக அதற்காகப் போராடி வருகிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!