2வது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
கோவை சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு இரண்டாவது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான பண பலன்களை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை சுங்கம் பகுதியில் உள்ள அரசுப் பேருந்து பணிமனை முன்பு சுமார் 100 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகத் தொடர் காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாகத் தமிழ்நாடு அரசு தொழிற் சங்கத்தினரை அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் மாநிலத் துணைச் பொதுச் செயலாளர் கனகராஜ் கூறும்போது: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானம் அடிப்படையில் 18 -ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
சுமார் 21 மையங்களில் 10,000 மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் இதே கூடாரத்தில் தங்கி இருந்த நிலையில், இரண்டாவது நாளாகப் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நேற்று போக்குவரத்துச் செயலர் அழைத்துப் பேசினார்., அப்போது போக்குவரத்து ஓய்வு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய பண பலன் ரூ.4,500 கோடியில், ரூ.1,113 கோடி உடனடியாக வழங்க அரசாணை கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பலன்களை வழங்க வேண்டும்., அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்தக் காத்திருப்பு போராட்டம் தொடரும். சென்னையில் போராடிவரும் போக்குவரத்து ஊழியர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இது கண்டிக்கத்தக்கது, மேலும் தொழில் நிறுவனங்கள் முன்பு போராடுவது தொழிலாளர்களின் உரிமை, தமிழ்நாடு அரசுத் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். தொழிலாளர்களை அழைத்து பேசி உரிய தீர்வுகளை காண வேண்டும் என தெரிவித்தார்.