நண்பனை கொலை செய்த வழக்கு – இருவரை காவலில் எடுத்து விசாரணை
சென்னை ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நியூட்டன், மற்றும் பெனிட்டோ ஆகிய இருவரை செட்டிபாளையம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் குதிரை பண்ணையில் பணியாற்றி வந்த பாலமுருகன் (42), மற்றும் அவரது சிறை நண்பரான முருகப் பெருமாள் (24) ஆகிய இரண்டு பேரும் கடந்த வாரம், சென்னை ஆட்டோ ஓட்டுனரான ஜெயராமன் (24), என்பவரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகச் செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஜெயராமனை சென்னையை சேர்ந்த அவர்களது நண்பராக நியூட்டன் (25) மற்றும் பெனிடோ (24) ஆகிய இரண்டு பேரும் அடித்துக் கொலை செய்து உடலைக் கோவைக்கு எடுத்து வந்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இவ்வழக்கு தொடர்பாக நியூட்டன், பெனிடோ, பாலமுருகன், முருகப்பெருமாள், ஜான்ராஜ், லோகேஷ் ஆகிய ஆறு பேரைச் செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான நியூட்டன் மற்றும் பெனிட்டோ ஆகிய இருவரை காவலில் எடுத்து விசாரிக்கச் செட்டிபாளையம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி மூன்று நாட்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று இரவு நியூட்டன் மற்றும் பெனிடோ ஆகிய இருவரையும் போலீசார் காவலில் எடுத்தனர்.
இருவரையும் சென்னையில் கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக எதற்காகக் கொலை நடந்தது? உடலை எப்படி கோவைக்கு எடுத்து வந்தனர்? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.