கோவையில் நடைபெற்ற டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி..!
தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு அமைப்பினர் இணைந்து மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
ஏழு வயதுக்கு உட்பட்ட பிரிவு, சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் எனப் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில், கோவை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பூம்சே கிரோகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்ற நிலையில், போட்டிகளில் கலந்து கொண்ட மழலை குழந்தைகள் மற்றும் மாணவிகள் ஆக்ரோஷமாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
முன்னதாகப் போட்டகளை ஒருங்கிணைத்த டேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் கூறுகையில், டேக்வாண்டோ விளையாட்டில் தேசிய, சர்வதேச அளவில் தமிழக மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதாகவும், குறிப்பாக டேக்வாண்டோ விளையாட்டிற்கு தேவையான போதுமான சென்சார் உபகரணங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசு வழங்க முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் சிறந்த முறையில் பயிற்சிகளைப் பெறும் மாணவர்கள் வர உள்ள ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர்.