கோவையில் நூற்றுக்கணக்கான வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்.
கோவை பேரூர் தீத்திபாளையம் அருகே மின்வேலியை உடைத்து விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகள் அங்குப் பயிரிட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழைகள் மற்றும் தென்னங் கன்றுகளைச் சேதப்படுத்தி சென்றது.
கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெருமாள் கோயில் வனபகுதியிலிருந்து, அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் பேரூர் தீத்திபாளையம், சுற்றுவட்டார பகுதிகளுக்குள் உலா வருகிறது. அதனைக் கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினரின் ரோந்து குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் தீத்திபாளையம் அருகே உள்ள பெருமாள் கரடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற விவசாயின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்தது.
முன்னதாக அங்கிருந்த மரத்தை முறித்துச் சோலார் மின் வேலிமீது போட்டு வேலியை உடைத்து, உள்ளே சென்ற மூன்று காட்டு யானைகள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது.
தொடர்ந்து அருகே உள்ள ஈஸ்வரன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த 50 வாழைகளை சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மூன்று காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
பெருமாள் மலை வனப்பகுதியில் சுமார் 25 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தற்போது உலாவி வரும் நிலையில், அடிக்கடி யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைப் பொருட்களைச் சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை அதிகாலை பெருமாள் கரடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த தென்னை கன்றுகளைக் காட்டு யானைகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. உடனடியாகக் காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.