இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டார் – வானதி சீனிவாசன்
இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டார். பாஜகவை தோற்கடிக்க முடியாத விரக்தியில் நாட்டில் கலவரத்தைத் தூண்ட பொய்களைப் பரப்பி வருகிறார் ராகுல் காந்தி
கடந்த 2014, மே 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததை அக்கட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாட்டை ஆள பிறந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும், நேரு குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தி, சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த, வாழ்வாதாரத்துக்காகச் சிறுவயதிலேயே தேநீர் விற்ற நரேந்திர மோடி பிரதமர் ஆனதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதனால் தான், நரேந்திர மோடி பிரதமரானது முதல், அவரது ஆட்சியை வீழ்த்தப் பல்வேறு முயற்சிகளை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். 1000, 500 ரூபாய் நோட்டுகளை பிரதமர் மோடி தடை செய்தபோது, அதை வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார். பிரான்சிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, 2019 லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்தார். ஆனால் அந்தத் தேர்தலில் ராகுல் காந்தியே தோற்றுப் போனார்.
இந்திய எல்லையைச் சீனா ஆக்கிரமித்து விட்டது ; நரேந்திர மோடி அரசால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து; அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசு; தேர்தல் பத்திரங்கள் வாயிலாகப் பாஜக நிதி வசூல்; குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு; வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி என்று பல்வேறு பிரச்னைகளில் நரேந்திர மோடி அரசுமீது பழி சுமத்தி, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பொய்களைப் பரப்பி, பாஜக அரசை வீழ்த்த நினைத்தார் ராகுல் காந்தி.
ஆனால், அவர் சொன்னது எதையும் மக்கள் நம்பவில்லை. அதனால், நரேந்திர மோடி அரசுக்கு எதிரான அவரது போராட்டங்கள் அனைத்தும் படுதோல்வியில் முடிந்தன. அந்த விரக்தியில், இப்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லி நாட்டில் கலகத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சித்து வருகிறார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதை தேர்தல் ஆணையம் காலம் காலமாகச் செய்து வருகிறது.
பீகார் மாநிலத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இறந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவுச் செய்தவர்கள், இந்திய குடிமகன் என்பதற்கான ஆவணங்கள் இல்லாதவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் மோசடிகள் நடந்துள்ளதாகத் தினந்தோறும் ஊடகங்கள் முன்பு குற்றம் சாட்டும் ராகுல் காந்தி, அதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் எந்தவித புகாரையும் அளிக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையையும் ராகுல் காந்தி ஏற்க வில்லை. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் அவர் வழக்கு தொடுக்கவில்லை. இதிலிருந்தே அவர் பொய்யை மூலதனமாக வைத்தே இந்தப் பிரச்னையை எழுப்பி வருகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால், அங்குக் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது தான் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதைக் காங்கிரஸ் ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் தான் தயாரித்தனர். பிறகு எப்படி மோசடி நடந்தது என்று அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் ராஜன்னா கேள்வி எழுப்பியிருந்தார். உண்மையைச் சொன்னதால் அவரது அமைச்சர் பதவி பறிபோய் இருக்கிறது. பாஜகவை வீழ்த்த ராகுல் காந்தி கையில் எடுத்த ஆயுதம், அவரது கட்சி அமைச்சர் பதவியே பலி வாங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம் என்ற ஒரு அமைப்பு இருந்தாலும், அது தனியாக எந்தப் பணியையும் செய்வதில்லை. அதற்கான ஊழியர்களும் அதற்கு இல்லை. மாநில அரசு ஊழியர்களைக் கொண்டே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் திருத்தம் போன்ற பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. பெரும்பாலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் மனிதத் தவறுகள் நடப்பது இயல்பானது.
பெயரில் எழுத்து பிழைகள், வயதை தவறாக பதிவு செய்வது போன்றவை எல்லாம் எப்போதும் எங்கும் நடப்பது தான். அப்படி தவறு நடந்தால் அதை சரி செய்வதற்கான வசதிகள் இப்போது வந்துவிட்டன. இணைய வழியிலேயே அதை சரி செய்து விட முடியும். இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் ஒருவர், பல இடங்களில் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சென்னையில் பணியாற்றியவர், இரண்டு ஆண்டுகளில் மும்பை செல்கிறார். பிறகு பெங்களூருவில் குடியேறுகிறார். அவர்கள் செல்லும் இடங்களில் வாக்காளராக பதிவு செய்கிறார்கள். இதனால் சிலர், இரண்டு மூன்று இடங்களில் வாக்காளர்களாக இருக்கின்றனர். இது போன்ற தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இது போன்ற தவறுகளை வைத்து வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு நடந்துள்ளது போன்று பொய்யை பரப்பி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த ராகுல் காந்தியும், அவரது கூட்டாளிகளும் முயற்சித்து வருகின்றனர். எது மனித தவறு, எது மோசடி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்காளர் பட்டியலில் யாரும் முறைகேடு செய்து விட முடியாது. தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முடியாது என்கிற நிலை வந்த பிறகுதான், திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தன. இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற நிலைக்கு ராகுல் காந்தி வந்துவிட்டார்.
ஹரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு ராகுல் காந்தி இந்த முடிவில் மிக மிக உறுதியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி என்று கூறி வந்தவர், இப்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்று பொய்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதிதான் வாக்காளர் பட்டியல் முறைகேடு என்ற பிரசாரம். ஆனால் இந்திய மக்கள் மிக மிகத் தெளிவானவர்கள். அவர்களுக்கு உண்மை, எது பொய் எது என்பது தெரியும்.
அதனால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சியை தோற்கடித்திருக்கிறார்கள். நரேந்திர மோடியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் விவகாரத்திலும் ராகுல் காந்திக்கு எப்போதும் போல தோல்வியே கிடைக்கும்.
இதை உணர்ந்து ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் செயல்பட வேண்டும்.