Lifestyleகோயம்புத்தூர்

தொடர் விடுமுறை எதிரொலி – ஆம்னி பேருந்துகள், விமான கட்டணங்கள் உயர்வு.

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறையென வெள்ளிக்கிழமை முதல் தொடர் பொது விடுமுறையை முன்னிட்டு, கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லப் படையெடுத்துள்ளனர்.

தொடர் விடுமுறைகளை கருத்தில் கொண்டு முன்கூட்டியே ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பெரும்பாலானோர் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து விட்டனர். இதனால் பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகள் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் கோவையிலிருந்து சென்னை செல்ல ரூ.800 முதல் ரூ.1000 வரை கட்டணமுள்ள நிலையில், தொடர் விடுமுறை நாட்களில் ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஆன்லைனில் பயண சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாகக் காட்டிவிட்டு, இறுதி நேரத்தில் வரும் பயணிகளிடம் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வசூலிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதே போல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்து கட்டணமும் அதிகரித்துள்ளது.

தொடர் விடுமுறை நாட்களை மையப்படுத்தி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள்மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதே போல் மூன்று நாட்கள் விடுமுறையை முன்னிட்டு விமான சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளும் அதிகளவு கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தைவிட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!