தூய்மை பணியாளர்களை கைது – கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்த காவல் துறையைக் கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப் பணியில் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான நியமனத்தை முற்றிலுமாகக் கைவிட வலியுறுத்தி, சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களைப் போலீசார் இரவோடு இரவாகக் குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்தனர். தூய்மை பணியாளர்களின் இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது உரிமைக்காகப் போராடிய தூய்மை பணியாளர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்த காவல்துறையை கண்டித்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கோவை மாவட்ட செயலாளர் ஜோதிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் ஆர்.கோபால் சங்கர், மாவட்ட நிர்வாகிகள் அ.கரீம், ஜெயக்குமார் உள்ளிட்ட முற்போக்கு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் அப்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும் எனவும், மோசமான கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையை கண்டித்தும் வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.