கோவையில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்!
கோவை அறிவொளி நகர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் அங்குள்ள ரேஷன் கடை ஷட்டரை உடைத்து அரிசி, பருப்பு ஆகிய பொருட்களை வெளியே இழுத்துப் போட்டு உண்டது.
கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அறிவொளி நகர் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறிப் பேரூர் தீத்திபாளையம், வேடப்பட்டி வழியாகக் கடந்து செல்கிறது.
இந்த நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் அறிவொளி நகர் அருகே உள்ள அண்ணா நகர் ரேஷன் கடை ஷட்டரை உடைத்து, உள்ளே இருந்த அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளை வெளியே இழுத்து போட்டு உண்டது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். வன எல்லையில் ரேஷன் கடை உள்ளதால் அவ்வழியாகச் சென்ற காட்டு யானைகள் திடீரென வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.