சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் பறிமுதல்!
கோவையில் அனுமதியின்றி சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்திய 6 கார் மற்றும் 12 இருசக்கர வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.1.80 லட்சம் அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி ராபிடோ இரு சக்கர வாகனங்கள் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதால், கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி கடந்த வாரம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் இணை போக்குவரத்து ஆணையர் அழகரசு உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் தலைமையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
இதில் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராகச் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது மற்றும் ரேபிடோ செயலிமூலம் இருசக்கர வாகனம் ஓட்டிய 6 கார் மற்றும் 12 இருசக்கர வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1.80 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூறும்போது: கடந்த முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராபிடோ இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தினோம்.
அதன் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வாகன பறிமுதல் மற்றும் அபராதம் விதித்துள்ளனர்,
அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதே போல் தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.