கேரளாவில் நீரில் முழ்கி கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!
கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சித்தூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் அருண்குமார் (21), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டிதுரை மகன் ஸ்ரீ கௌதம் (21), இருவரும் கோவை ஈச்சனாரி அருகே அறை எடுத்துத் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயோ டெக்னாலஜி படித்து வந்தனர்.
இந்நிலையில் அருண்குமார் மற்றும் ஸ்ரீ கௌதம் தனது சக நண்பர்களுடன் கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு இன்று சுற்றுலா சென்றனர். அப்போது அங்குள்ள சித்தூர் ஆற்றில் அருண்குமார் மற்றும் ஸ்ரீ கௌதம் ஆகிய இருவரும் இறங்கி நீச்சல் அடித்துக் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றின் ஒரு பகுதியில் சுழல் ஏற்பட்ட நிலையில், திடீரென உள்ளே குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீ கௌதம் நீரில் மூழ்கினார். அதனைத் தொடர்ந்து அருகே குளித்துக் கொண்டிருந்த அருண்குமார் சுழலில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த சக நண்பர்கள் அவர்களை மீட்க முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர்கள் சித்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்புத்துறையுடன் வந்த போலீசார் நீரில் மூழ்கிய ஸ்ரீ கௌதம் மற்றும் அருண்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீ கௌதமை தீயணைப்புத்துறையினர் மீட்டு உடனடியாகப் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நீண்ட நேரம் போராடி அருண்குமார் உடலைத் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
இதையடுத்து இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காகப் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.