போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து!
கோவை மாவட்டம் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பராமரிப்புப் பணிகளால் ஆகஸ்ட் 10 (ஞாயிற்றுக்கிழமை) போத்தனூரிலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66612) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, மேட்டுப்பாளையத்திலிருந்து அன்று பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கேரள ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்: பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆலப்புழையிலிருந்து புறப்படும் ஆலப்புழை- தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) கோவை வழியாக இயக்கப்படாமல், போத்தனூா் – இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.
இதேபோல, அன்று காலை 9.10 மணிக்கு எா்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எா்ணாகுளம்- பெங்களூரு ரயில் (எண்: 12678) கோவை வழியாக இயக்கப்படாமல், போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.