மருதமலை கோயில் உண்டல் திறப்பு – 108 கிராம் தங்கம் காணிக்கை
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.65.54 லட்சம் ரொக்கம், 108 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி முருகனின் ஏழாம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டல் திறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு மருதமலை கோயில் தக்கர் ச.ஜெயக்குமார், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலரான இரா.செந்தில்குமார், தேக்கம்பட்டி வனபத்ரிகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் உ.ச.கைலாச மூர்த்தி, பேரூர் சரக ஆய்வாளர் பெ.பவானி, அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.மாலை 6 மணியளவில் உண்டியல் எண்ணும் பணிகள் நிறைவடைந்தது.
இதில் நிரந்தர உண்டியலிலிருந்து ரூ.65.54 லட்சம், மற்றும் 108 கிராம் தங்கம், 4.098 கிலோ வெள்ளி, 13.950 கிலோ பித்தளை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி இருந்ததது தெரியவந்தது.
மேலும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணிகள் முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டது.