கோவை தனியார் கிடங்கில் கண்டறியப்பட்ட மனித கை – விசாரணையில் பரபரப்பு தகவல்
கோவை சூலூர் அருகே கண்டறியப்பட்ட மனித கை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகுபாண்டி என்ற இளைஞரது என்பது தெரியவந்துள்ளது.சில நாட்களுக்கு முன்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றபோது கை மற்றும் கால் துண்டானது குறிப்பிடத்தக்கது
கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் தனியார் கிடங்கு அருகே மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து தனியார் நிறுவன மேலாளர் சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கையை மீட்டு தடையவியல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் சுற்றித் திரியும் நாய் ஒன்று கையை எடுத்து வந்தது தெரியவந்தது.
மேலும் கைக்கண்டறியப்பட்ட இடத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் மருத்துவ கழிவுகள் அழிக்கப்படும் நிறுவன ம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
ஒருவேளை நாய் அந்தக் கிடங்கிலிருந்து கையை எடுத்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில் சூலூர் அருகே கண்டறியப்பட்டது திருப்பூர் மாவட்டம் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டி (28) என்பவரது கை என்பது தடையவியல் சோதனையில் தெரிந்தது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுபாண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதும், இதில் அவரது ஒரு கை மற்றும் கால் உண்டானதும் தெரியவந்தது.
தற்போது அழகு பாண்டி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மருத்துவ கழிவுகள் அழிக்கப்படும் கிடங்கிலிருந்து நாய் கையை எடுத்து வந்திருக்கலாமென போலீசார் தெரிவித்துள்ளனர்.