பிறந்து 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயற்சி – பெண் கைது
கோவையில் பிறந்து 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சிந்து என்ற பெண்ணை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்தனர். பெண் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி விஜயசாந்தி. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று மகள்களுள்ள நிலையில், நான்காவதாகக் கடந்த மாதம் 26 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருப்பதால் நான்காவது பிறந்த பெண் குழந்தையைத் தத்து கொடுக்க முடிவு செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் அறிமுகமான சிந்து(32) என்பவர் குழந்தையைத் தத்து கொடுக்க உதவுவதாகக் கூறி, குழந்தையைச் சோமனூரை சேர்ந்த ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு, விலைக்கு விற்க முயன்றுள்ளார்.
திருப்பூர் மங்கலத்திலிருந்து குழந்தையை வாங்கி சோமனூர் பகுதியில் விற்க முயன்ற நிலையில் குழந்தையானது மீட்கப்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் 11 நாட்கள் ஆன பெண் குழந்தையை மீட்டதுடன், குழந்தையை விற்க முயன்ற சிந்துவை பிடித்துக் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குழந்தையை விற்க முயன்ற சிந்துவை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர்.
மேலும் குழந்தையின் பெற்றோருக்குத் தெரிந்து இந்த விற்பனை நடைபெற்றதா? அல்லது குழந்தையின் பெற்றோரை ஏமாற்றி குழந்தையை வாங்கி விற்பனை செய்ய முயன்றாரா என்பது குறித்து குழந்தையின் பெற்றோரிடம் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.