மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கும் போராட்டம்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததை கண்டித்து, கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மண்டியிட்டும், பிரம்பால் அடித்துக் கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை வழங்காததால் இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
இந்த நிலையில் தமிழகத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய அரசு கண்டித்தும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மண்டியிட்டும், பிரம்பால் அடித்துக் கொண்டும் மன்னிப்பு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்றிய அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் கூறியதாவது: கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பாகப் பள்ளி குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கின்ற போராட்டத்தை நடத்தியுள்ளோம்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இந்த முறை தமிழ்நாடு அரசு மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. ஒன்றிய அரசு இதற்கான பணத்தை கடந்த மூன்று ஆண்டுகளாகத் தரவில்லை.
இதன் காரணமாக இந்த ஆண்டு 1.5 லட்சம் மாணவ மாணவிகள் இந்தக் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேரவில்லை, ஏற்கனவே படித்து வரும் சுமார் 6 லட்சம் குழந்தைகள் பணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். அதில் உடனடியாகப் பணத்தை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பு வந்து 60 நாட்களுக்கு மேலாகியும் இரு அரசுகளும் அதனை அமல்படுத்தவில்லை. இதனால் பல குழந்தைகள் கல்வி பரிப்போனதற்காக அந்தக் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் போராடியுள்ளோம்.