கேரளா: ஓய்வு பெற்ற பெண் ஆசிரியை கொடூரமாகத் தாக்கிய நபர் கைது
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பெண் ஆசிரியை கொடூரமாகத் தாக்கிய நபரைப் போலீசார் கைது செய்தனர். வழிப்பாதை பிரச்சனையில் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சரஸம்மா (71). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சசிதரன்.
இவர் சரஸம்மாவின் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, வழியாகப் பயன்படுத்தியது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாளாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் வழிப்பாதை தொடர்பான பிரச்சனையில் ஆத்திரமடைந்த சசிதரன் சரஸம்மாவை கொடூரமாகத் தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரஸம்மாவின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாகக் கோட்டக்கரா போலீசார் வழக்குப் பதிவு செய்து சசிதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே பெண் ஆசிரியை கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.