கிங்டம் திரைப்படம்: திரையரங்கை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்!
கோவையில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள கே ஜி திரையரங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம் தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஜூலை 31 ம் தேதி வெளியானது.
இந்தத் திரைப்படத்தில் ஈழ தமிழர்களைக் கொச்சைபடுத்தும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறி நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் படத்தைத் திரையிடக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் கோவையில் உள்ள கேஜி திரையரங்கில் படம் திரையிடப்பட்டுள்ளதக அறிந்த நாம் தமிழர் கட்சியினர் இன்று திரையரங்கை முற்றுகையிட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது
ஒருவர் மட்டும் திரையரங்குக்குள் அத்துமீறிக் கையில் கொடியுடன் ஓடினார். காவல் துறையினர் அவரை விரட்டிச் சென்று கைது செய்தனர்.
இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 16 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து இன்று காலை நடைபெற இருந்த காலைக் காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து அப்துல் வகாப் கூறியதாவது: தொடர்ந்து தெலுங்கு படங்களில் ஈழத் தமிழர்களைப் போதை பொருட்கள் கடத்தல், பயன்படுத்து போலச் சித்தரிக்கின்றனர். இதை ஏற்கனவே கண்டித்துள்ளோம்.
இத்திரைபடத்தை திரையிடக் கூடாது எனத் தெரிவித்த நிலையில் அவ்வாறு மீறித் திரையிடப்பட்ட திரையரங்கை முற்றுகையிட்டு வருகிறோம்.
மேலும் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கும் இந்தத் திரைப்படத்தைத் திரையிடக் கூடாது, மீண்டும் திரையிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.
போராட்டம் காரணமாகத் திரையரங்கம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.