மழை நீரில் மிதந்த எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் – சேதமான காய்கறிகள்
கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் மழை நீரில் மூழ்கியது, இதனால் பல லட்சம் நஷ்டம் மதிப்பிலான காய்கறிகள் சேதமானதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்திற்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
பழமையான இந்த மார்க்கெட் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போது கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக முறையான சாலை இல்லாத்தாலும், மேற்கூரைகள் இல்லாததாலும் பல லட்சம் மதிப்பிலான காய்கறிகள் அழுகி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் மார்க்கெட்டில் மேம்பாட்டு பணிகளும், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே நேற்று இரவு பெய்த தொடர் மழையால் மார்க்கெட்டிற்குள் மழை நீர் புகுந்தது.
குறிப்பாகத் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 30 கடைகள் நீரில் மூழ்கியது. இதனால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உடனடியாக நீரில் அப்புறபடுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறும்போது: கடந்த 35 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாகச் சந்தைக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு வருகிறோம்.
தற்போது மாநகராட்சி சார்பில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் சந்தை முழுவதும் மழை நீரால் சூழப்பட்டது.
இதனால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். உடனடியாக மாநாகராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் பொருட்கள் வைக்கக் கூரைகள் இல்லை, இட வசதி பத்தாது.
ஒவ்வொரு முறையும் மழை வரும்போது காய்கறிகள் நீரில் நனைத்து ரூ.25 முதல் ரூ.30 லட்சம்வரை நஷ்டம் ஏற்படுகிறது. விரைவாக மாநாகராட்சி நிர்வாகம், சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.