கோவை குற்றாலம் அருவி மூடல்!
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான வாய்ப்பு உள்ளதால், சென்னை வானிலை ஆய்வு மையம் இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கோவை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேலும் இன்று முழுவதும் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாகவும், நீர்வரத்தின் அளவு பொறுத்து மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.