கேரளா வியாபாரிகளிடம் ரூ.26.40 லட்சம் பறிமுதல்.
கோவை எட்டிமடை சோதனைச் சாவடி அருகே கேரளா வியாபாரிகள் ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.26.40 லட்சத்தைக் கே.ஜி.சாவடி போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை கேரளா நெடுஞ்சாலையில் அடிக்கடி ஹவாலா பணம் கடத்தல் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த மாதம் கேரளா நகை வியாபாரிகளைத் தாக்கித் தங்கக் கட்டிகள் மற்றும் ரூ.30 லட்சம் வழிப்பறி சம்பவம் நடந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், எட்டிமடை பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை காலைச் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றை போலீசார் நிறுத்திச் சோதனையிட்டனர்.
அப்போது அதில் கட்டுக் கட்டாகப் பணம் மற்றும் கவரிங் வளையல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை விசாரித்தபோது அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் சேர்ந்த அப்துல் அக்கீம் (49), அப்துல் ரகுமான் (38), என்பதும், இவர்கள் கேரளாவில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.26.40 லட்சம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து கே.ஜி சாவடி காவல் நிலையத்திற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின் அப்பணத்தை பறிமுதல் செய்தனர். இதனிடையே புதிதாகத் திறக்கப்பட்ட எட்டிமடை போலீஸ் சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.