சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடாதீர்கள் – சி.பி.ராதாகிருஷ்ணன்.
சமூக வலைதளங்களில் மட்டுமே இளைஞர்கள் நேரத்தைச் செலவிடக் கூடாது எனக் கோவை ஸ்ரீ அபிராமி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் உள்ள ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவன கல்லூரிகளின் 14 -வது பட்டமளிப்பு விழா, ஈச்சனாரி தனியார் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நர்சிங், பார்மசி, தொழில்சார் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் துணை சுகாதார அறிவியல் துறையைச் சேர்ந்த சுமார் 284 பட்டதாரிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கினார்.
மேலும் ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். பி. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய மருத்துவசங்கத்தின், மருத்துவர்கள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர். ஏ. முருகநாதன், ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் டாக்டர். எம். குந்தவி தேவி, டாக்டர். ஆர். செந்தில் குமார், டாக்டர். பி. பாலமுருகன், டாக்டர். பி. உமாதேவி, டாக்டர். பி. சுசரிதா, டீன் மற்றும் அபிராமி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இத்துறையில் மருந்து முக்கியம் கிடையாது, மனிதத்துவம் தான் முக்கியம். கேரளாவை சேர்ந்தவர்கள் செவிலியராகப் பல நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
வாழ்வில் வெற்றியடைய குழுவாகச் செயல்பட வேண்டும். சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடாதீர்கள். பட்டதாரிகளுக்கு வழிகாட்டி, கற்றல் மற்றும் கடின உழைப்பு வெற்றிக்கு முக்கியம் அதை இந்தக் கல்லூரி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
தொழில் வாழ்க்கையை மேம்படுத்த இது மிகவும் அவசியம். குறுக்குவழியில் நீண்ட நாட்கள் வெற்றி பெற முடியாது. சமூகத்தின் அழுத்தத்தால் அல்லாமல், தங்கள் ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். பட்டதாரிகள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நுழையும்போது, பெரிய கனவு காணுங்கள்,
இறுதி இலக்கைவிட பயணம் மிகவும் உற்சாகமானது. வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையான மனப்பான்மையுடன் இருங்கள்.அறிவுதான் சக்தியெனச் சுவாமி விவேகானந்தர் மற்றும் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறுகுறித்து பேசினார்.