நீலாம்பூர் – மதுக்கரை இடையே 5 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடல்.
கோவை நீலாம்பூர் – மதுக்கரை நெடுஞ்சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை துறையின் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் செயல்பட துவங்கியது.
கோவையில் போக்குவரத்து நெரிசலை கடந்த 1999 – ல் நீலாம்பூரிலிருந்து மதுக்கரை வரை 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. மேலும் எல்.அன்.டி நிறுவனம்மூலம் அமைக்கப்பட்டதால் 30 ஆண்டுகளுக்குச் சுங்கவசூல் செய்யும் உரிமமும் அந்நிறுவனம் பெற்றது.
இதற்காக நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை 6 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணமானது வசூலிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்ட நிலையில், நீலாம்பூரிலிருந்து மதுக்கரை வரை இடைப்பட்ட 28 கிலோமீட்டர் தூரம் மட்டும் இருவழிச் சாலையாகவே இருந்து வந்தது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இந்தச் சாலையினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இது தொடர்பாக ஒன்றிய அரசு எல் & டி நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, எல் & டி நிறுவனம் சாலையைத் தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்தது.
இதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 6 சுங்கசாவடிகளிலும் சுங்க கட்டணத்தை வசூல் செய்து வந்தது. இந்நிலையில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பின்படி புதிய சுங்க கட்டண வசூல் ஆகஸ்டு 1 தேதி முதல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் நீலாம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆறு சுங்கச்சாவடிகளில் 5 சுங்கசாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் செயல்படுத்துவது எனவும், மதுக்கரை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மட்டும் கட்டண வசூலை, தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண விதிகளின்படி தொடர இருப்பதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
அதன் படி நீலம்பூர் – மதுக்கரை இடையேயான 5 சுங்கச்சாவடிகள் முழுமையாக மூடப்பட்டு, மதுக்கரை சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் பல்வேறு பகுதிகளில் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய கட்டணமாகக் கார், வேன், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.35, இலகு ரக சரக்கு வாகனம், மினி பேருந்துக்கு ரூ.60, லாரி, பேருந்துகளுக்கு ரூ.125 மற்றும் அடுத்தடுத்து வரும் கனரக வாகனங்களுக்கு முறையே ரூ.135, ரூ.195, ரூ.235 எனச் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் குறைவான தூரத்தைக் கடக்க ரூ.17 மட்டுமே செலுத்தி வந்த நிலையில், அவர்களும் ரூ.35 கட்டணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தினமும் நெடுஞ்சாலையில் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதிய கட்டண குழப்பத்தால் வாடகை வாகன ஓட்டுநர்கள் சுங்கச் சாவடி ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.