தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 185 சாதிய ஆணவக்கொலைகள்.!
நெல்லை பட்டதாரி இளைஞர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணைப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் கடந்த ஜூலை 27 -ம் தேதி மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் என்பவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுகந்தி, மாவட்டச் செயலாளர் நாகராஜ், மற்றும் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், சுதா, ஜூல்பி, அர்ஜுன், உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு கவின் செல்வகணேஷ் சாதி ஆணவ படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநில மற்றும் ஒன்றிய அரசு உடனடியாகச் சாதி ஆணவப் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி கூறியதாவது : நெல்லை இளைஞர் சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாகப் பட்டதாரி, வசதியான இளைஞர் சாதிய வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் சாதிய ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. சமூகநீதி மற்றும் பெரியார் பேசிய மண் எனப் பெருமை பேசுகிறோம், இந்த மண்ணில் சாதி ஆணவப் படுகொலை நடக்கிறது. பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது,
இதில் காவல்துறை குடும்பப் பின்னணி உள்ள நபர்கள் இதை அரங்கேற்று இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதிகாரம் படைத்தவர்கள் இக்குற்றத்தை செய்துள்ளனர். மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தான் போராட்டம் நடைபெற்று வருகிறது.
குற்றவாளியின் தந்தையான உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயையும் கைது செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 185 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளது.
திமுக தலைவர் இச்சம்பவங்களை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவோம் எனக் கூறினார். ஆனால் இதுவரை கொண்டு வரவில்லை. மேலும் தற்போது உள்ள எஸ்.சி, எஸ்.டி சட்டம் போதும் என்கிறார்கள்,
ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்கள், இளைஞர்கள் பாதிக்கப்படும்போது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. உடனடியாகச் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.