கோவையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் தீயில் எரிந்து நாசம்!
கோவை பேரூர் அருகே மின்சார இரு சக்கர வாகனத்தில் தீப்பிடித்து, அடுத்தடுத்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் தீயில் எரிந்து நாசமானது.
கோவை பேரூர் அருகே உள்ள கூட்டுறவு நகரை சேர்ந்தவர் பாபு மகன் சுஜித் (39),. இவர் தனியார் விடுதியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு வழக்கம்போல் தனது மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் காரை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீரென வீட்டின் வெளியே சத்தம் கேட்டுள்ளது. அப்போது சுஜித் வெளியே வந்து பார்த்தபோது மின்சார இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
அப்போது உடனடியாகத் தீயை அணைக்கும் பணியில் சுஜித் ஈடுபட்டார். அதற்குள் அடுத்தடுத்து இருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் காரில் தீப்பரவியது. இதையடுத்து சுஜித் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
விரைந்து வந்த கோவைப்புதூர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவை முழுமையாகத் தீயில் எறிந்து நாசமானது.
இச்சம்பவம் தொடர்பாகப் பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.